காதலனுக்கு கஷாயத்தில் விஷம்; காதலி கிரீஷ்மாவுக்கு சாகும்வரை தூக்கு - தண்டனை விவரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜிக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு நாட்டையே உலுக்கியிருந்தது.
இந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(24) மற்றும் பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்த அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருந்தது. அவர்களுக்கான தண்டனை சனிக்கிழமை வழங்கப்பட உள்ளதாக கோர்ட் கூறியிருந்தது. அதே சமயம் சனிக்கிழமை இறுதிக்கட்ட வாதம் நடந்தது. அப்போது, தான் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும், இன்னும் படிக்க வேண்டும். தனக்கு 24 வயதுதான் ஆகிறது. எனவே தண்டனையில் இயன்ற அளவு கருணைகாட்ட வேண்டும் என கிரீஷ்மா கோர்ட்டில் மனு அளித்திருந்தார்.
அதே சமயம் அரசு தரப்பு வழக்கறிஞர், `ஒரு இளைஞனின் காதலை கிரீஷ்மா கொன்றிருக்கிறார். காதலிப்பதாக நடித்து வீட்டுக்கு அழைத்து கொலை செய்துள்ளார். கொடூரமான ஒரு குற்றவாளியால் மட்டுமே இப்படிப்பட்ட கொடூரத்தை செய்ய முடியும். மிகத் துல்லியமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார். ஷாரோன்ராஜ் 11 நாட்கள் மருத்துவமனையில் பட்ட வேதனைகள் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உள்ளது. இது தற்செயல் கொலையல்ல முன்கூட்டியே திட்டமிட்டதாகும். ஷாரோன்ராஜிக்கும் நிறைய கனவுகள் இருந்தன. அந்த கனவுகளை கிரீஷ்மா தகர்த்துவிட்டார். கிரீஷ்மா எதற்கும் வருத்தப்படமாட்டார். கிரீஷ்மா பிசாசின் சுபாவம் கொண்டவர், எனவே அவர் கருணைக்கு தகுதியற்றவர். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.
ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்த கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி பஷீர் இன்று காலை 11 மணி முதல் தண்டனையை அறிவிக்கத் தொடங்கினார். `குற்றவாளிக்கு இதற்கு முன்பு குற்ற வழக்கு பின்னணி இல்லை என்பதை கணக்கில் எடுக்க முடியாது. அவர் ஏற்கனவே ஷாரோன்ராஜை கொலைச் செய்ய முயன்றுள்ளார். அவரது வயதையும் கணக்கில் எடுக்க முடியாது. ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலைச் செய்ய கிரீஷ்மா முயன்றுள்ளார். ஷாரோன் ராஜ் அனுபவித்தது மிகப்பெரிய வேதனை.
11 நாட்கள் மருத்துவமனையில் ஒருச்சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவர் அனுபவித்தது மிகப்பெரிய வேதனை. ஆனாலும், அவர் கிரீஷ்மாமீது குற்றம் எதுவும் சொல்லவில்லை. கிரீஷ்மா விசாரணையின்போது காவல் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ய முயன்றது விசாரணையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சி ஆகும். எனவே இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது என்பது இல்லை” என தெரிவித்த நீதிபதி கிரீஷ்மாவுக்கு சாகும் வரை தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்த கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது