``காருக்கு ஆயுள் முடிந்தது" - ரூ.4 லட்சம் செலவில் காருக்கு சமாதி... இறுதி ஊர்வலத்தில் 1500 பேர்..!
மக்கள் வளர்ப்பு பிராணிகள், தங்களது வாகனங்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். திடீரென வளர்ப்பு பிராணிகள் இறந்துவிட்டால் அதனை சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு இறந்து போகும் வளர்ப்பு பிராணிகளை சிலர் ஊர்வலமாக எடுத்துச்சென்று மரியாதையுடன் தகனம் அல்லது அடக்கம் செய்வது வழக்கம்.
குஜராத்தில் ஒரு விவசாய குடும்பம் தங்களது அதிர்ஷ்ட காரின் ஆயுள் காலம் முடிந்ததால் அதனை சகல மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. அம்ரெலி மாவட்டத்தில் உள்ள பதர்சின்ஹா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் பொலாரா என்பவருக்கு வேகன் ஆர் என்ற கார் இருந்தது. அந்த காரை அவர் தனது அதிர்ஷ்டமான காராக கருதினார். ஆனால் காருக்கு அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. இதையடுத்து அக்காருக்கு வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கார் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சஞ்சய் தோட்டத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலகத்தில் கிராம மக்கள், உறவினர்கள் என 1500 பேர் கலந்து கொண்டனர். ஆரவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க தோட்டத்திற்கு காரை கொண்டு சென்றனர். தோட்டத்தில் காரை அடக்கம் செய்ய 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு இருந்தது. அக்குழியில் கார் மெதுவாக இறக்கப்பட்டது. பின்னர் காருக்கு இறுதிச்சடங்கிற்கான பூஜைகளை செய்தனர். கார் பச்சை துணியால் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெ.சி.பி மூலம் கார் இருந்த குழி மூடப்பட்டது. காரின் இறுதிச்சடங்கு மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 1500 பேருக்கும் பூரி, சப்பாத்தி, லட்டு என சாப்பாடு கொடுத்து சஞ்சய் அசத்தினார்.
காரின் ஆயுள் காலம் முடிந்ததும் காரை சமாதியாக்க வேண்டும் என்று முடிவு செய்த சஞ்சய் அதனை பிரமாண்டமாக செய்ய முடிவு செய்தார். இதற்காக சிறப்பு அழைப்பிதழ் தயாரித்தார். அந்த அழைப்பிதழை 2000 பேருக்கு கொடுத்து காருக்கான இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து சம்பவத்தன்று சஞ்சய் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என 1500 பேர் கூடினர். வித்தியாசமான முறையில் காருக்கு இறுதிச்சடங்கு மற்றும் சமாதி செய்தது குறித்து சஞ்சய் கூறுகையில், ''இந்த கார் 2006-ம் ஆண்டில் இருந்து எங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே இருந்தது. இந்த கார் வாங்கிய பிறகுதான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைத்தது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
எனவே அதனை எங்களது அதிர்ஷ்ட வாகனமாக கருதினோம். காரின் ஆயுள் காலம் முடிந்ததால் எதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்தோம். அந்த காரை விற்பனை செய்வதற்கு பதில் அதனை எங்களுடனே வைத்துக்கொள்ளும் விதமாக அதனை எங்களது தோட்டத்தில் சமாதியாக்கிவிட்டோம்'' என்றார்.
காரை சமாதி செய்த தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் அதில் மலர் தூவி மரியாதை செலுத்த முடிவு செய்துள்ள சஞ்சய் குடும்பம் காரை புதைத்த இடத்தில் ஒரு மரம் வளர்க்கவும் முடிவு செய்துள்ளனர். காரை சமாதி செய்ய மட்டும் சஞ்சய் 4 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்.
தனது எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்தும் விதமாக தங்களது அதிர்ஷ்ட காரை தோட்டத்தில் புதைத்திருப்பதாக கூறும் சஞ்சய் ஆரம்பத்தில் விவசாயம் செய்து வந்தார். இப்போது சூரத்தில் கட்டுமானத்தொழில் செய்து வருகிறார். காரை அடக்கம் செய்யும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த கார் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கிராமத்தை சேர்ந்த விபுல் சோஜித்ரா கூறுகையில், "காரின் சமாதி விழாவிற்கு அவர் என்னை அழைத்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். குடும்பத்தினர் தங்கள் அன்பான காருக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார்கள் என்று கூறினார்.." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb