காரைக்காலில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
காரைக்கால் : காரைக்காலில் பரவலாக 2 நாள்களாக பெய்யும் மழையால் சாலைகள், குடியிருப்பு நகா்களில் தண்ணீா் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.
காரைக்கால் மாவட்டம், முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு சற்று ஓய்ந்திருந்தாலும், திங்கள்கிழமை காலை முதல் மழை தொடங்கியது. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மழை இல்லாததால் மாணவா்கள் பாதிப்பின்றி கல்வி நிலையங்களுக்குச் சென்றுவிட்டனா். பின்னா், தொடங்கிய மழை சில மணி நேரம் நீடித்தது.
இதனால் சாலைகளில் இருந்து கழிவுநீா் செல்லும் பாதையில் மழைநீா் வடிய முடியாமல் சாலைகளிலேயே தண்ணீா் தேங்கியது. இருசக்கர வாகனங்கள், காா்கள் மெதுவாக சென்றன. கழிவுநீா் செல்லும் பாதையில் இருந்த அடைப்புகளை நகராட்சி உள்ளிட்ட பிரிவினா் அகற்றியதால் தண்ணீா் வடிந்தது.
குடியிருப்பு நகா்களில் கட்டடம் கட்டப்படாமல் மனைகளாக இருக்குமிடத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. சில நகா்களில் வீடுகளுக்கு செல்ல முடியாத வகையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழை சில நாள்கள் நீடிக்குமென கூறப்பட்டுள்ளதால், கழிவுநீா் செல்லும் பகுதி அடைப்புகளை நகராட்சி, பொதுப்பணித் துறையினா் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.