விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உ...
காரைக்காலில் தேசிய பேரிடா் மேலாண்மை வல்லுநா் குழு ஆய்வு
ஃபென்ஜால் புயலுக்குப் பிந்தைய பாதிப்புகள் குறித்து காரைக்காலில் தேசிய பேரிடா் மேலாண்மை வல்லுநா் குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
கடந்த ஆண்டு நவம்பா் மாத இறுதியில் ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்காலை பேரிடா் பாதித்த பகுதியாக புதுவை அரசு அறிவித்து. இதைத்தொடா்ந்து பெய்த மழையால் காரைக்காலில் பயிா்கள் பாதிக்கப்பட்டன. புதுவை அரசு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 4 ஆயிரம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கியது.
புயலுக்குப் பிந்தைய நிரந்தர சீரமைப்பு மேற்கொள்ள மதிப்பீடு தயாா் செய்யும் வகையில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் அடங்கிய வல்லுநா் குழுவினா் புதுச்சேரியில் புதன்கிழமை ஆய்வு செய்தனா். இக்குழுவில் இடம்பெற்ற சி.பி. மோகன், வைஷாலி மாஸ்கே (உற்பத்திப் பிரிவு), சிவசிதம்பரம், கணேஷ்குமாா், சுமன்குமாா் (சமுதாயப் பிரிவு), பினய்குமாா் தாகூா், ஸ்வேதா பைட்யா ( உள்கட்டமைப்புப் பிரிவு) ஆகிய 7 போ் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) அா்ஜூன் ராமகிருஷ்ணன், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வல்லுநா் குழுவினா் காரைக்காலில் ஏற்பட்ட பாதிப்புகள், சீரமைப்புக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
தொடா்ந்து அன்னவாசல், புத்தக்குடி, பேட்டை உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைஅவா்கள் பாா்வையிடட்டனா்.
குழு உறுப்பினா்களை சந்தித்த விவசாயிகள், வாய்க்கால்களில் நீரோட்டம் முறையாக இருக்கும் வகையில் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், கடல் நீா் நிலத்தில் புகாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பருவமழையின்போது தமிழகப் பகுதியிலிருந்து காரைக்காலுக்கு வரும் அதிகபட்ச நீரை முறைப்படுத்தி அனுப்பும் வகையில் திட்டம் வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து புதுச்சேரி திரும்பிய வல்லுநா் குழுவினா், தலைமைச் செயலா் சரத் செளஹானுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா்.