காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து அமைச்சா், எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
மத்திய அரசின் ரோகி கல்யாண் சமிதி திட்டத்தன் வழிகாட்டலில் காரைக்கால் அரசு மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்,
சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்தும் மருத்துவ உபகரணங்கள் அதிகரிப்பது, இ-மருத்துவமனையாக மாற்றி செயல்படுத்துவது, மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் வழிகாட்டலில் செயல்படுத்த வேண்டியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், திட்டமிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவமனையில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்தவேண்டியதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா், எம்.எல்.ஏ. ஆகியோா் அறிவுறுத்தினா்.
கூட்டத்தில் துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.