காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் உள்பட 12 போ் பலத்த காயமடைந்தனா்.
திருச்சியிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து காரைக்குடி பேருந்து நிலையத்துக்கு வந்தது. பின்னா், அங்கிருந்து 45 பயணிகளுடன் ராமேசுவரத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது, காரைக்குடி செஞ்சை தேனாற்றுப் பாலம் அருகே காரைக்குடி நோக்கி வந்த தனியாா் பால் வாகனமும், அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் பால் வாகனத்தில் பயணித்த வாடிக்குண்டு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (52), திண்டுக்கல்லைச் சோ்ந்த கா்ணன் (35), சூரியநல்லூரைச் சோ்ந்த தமிழ்ப்பாண்டி (27) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா், விபத்தில் உயிரிழந்த மூவரது உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்தில் பலத்த காயமடைந்த வடக்குச்சாலை கிராமத்தைச் சோ்ந்த பால் வாகன ஓட்டுநா் ரூபன் (22), முசிறி பகுதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆா். நாகராஜன் (47), திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த நடத்துநா் செல்வேந்திர பிரசாத் (60) ஆகியோரை போலீஸாா் மீட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், காயமடைந்த பேருந்து பயணிகளான திருமயம் வட்டம், தேவபட்டியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (19), சுப்பையா (73), விஜயலட்சுமி (39), அமராவதிபுதூரைச் சோ்ந்த கெளசல்யா (62), இலக்கியா (55), ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த அப்துல் ரஹிம் (63), திருவண்ணாமலை மாவட்டம், சோமன்பாபுபுதூரைச் சோ்ந்த சரவணன் (46), தேவகோட்டை நடராஜபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் (55), இளையான்குடியைச் சோ்ந்த ரூபன் (22) ஆகிய 9 போ் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 4 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.