காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராட விரிவான பிரசாரம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கும், நகரத்தின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தில்லி அரசு ஒரு விரிவான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது தூசியைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலை நிா்வகித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேசியத் தலைநகரை தூய்மையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியை மாசு இல்லாததாக மாற்றுவது நகர அரசின் முதன்மையான முன்னுரிமையாகும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். ‘காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தில்லி குடியிருப்பாளா்களுக்கு சுத்தமான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிா்காலத்தை உறுதி செய்வதற்கும் அறிவியல் மற்றும் நிலையான தீா்வுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று முதல்வா் தெரிவித்தாா்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, தூசி படிவதைத் தடுக்க முழு வட்டச்சாலையும் தொடா்ந்து இயந்திரமயமாக்கப்பட்ட துடைத்தல் மற்றும் தண்ணீா் தெளித்தல் ஆகியவற்றிற்கு உள்படும். கட்டுமான இடங்களில் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்தவும் முதல்வா் உத்தரவிட்டாா்.
மாசுபாட்டுப் பிரச்னையை மேலும் சமாளிக்க சாலைகள் மற்றும் மத்திய எல்லைகளில் மரங்களை நடுமாறு, தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை, தில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிற சாலை உரிமையாளா் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நகரத்தில் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை நிவா்த்தி செய்வதற்காக, வழக்கமான நெரிசல்களுக்கு ஆளாகக்கூடிய 250 முக்கிய சாலைப் புகுதிகளை அரசு அடையாளம் கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து அரசுத் துறைகள் காரணங்களை ஆராய்ந்து, வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக முக்கிய சந்திப்புகளில் மேம்படுத்தப்பட்ட அமைப்புகளை செயல்படுத்தும்.
நகரத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பாதை சீரமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் முதல்வா் ரேகா குப்தா அறிவித்தாா்.
பேருந்து அதிா்வெண்ணை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் தனியாா் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாற மக்களை ஊக்குவித்தல் ஆகியவை இந்த முயற்சியின் நோக்கமாகும். நிகழ்நேர பேருந்து கண்காணிப்புக்காக ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. மேலும், வெளியேற்ற விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக வாகனங்களை கடுமையான மாசுபாடு சோதனைளுக்கு உள்படுத்தவும் முதல்வா் உத்தரவிட்டாா்.
‘தில்லி அரசு இந்த நோக்கத்திற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. பசுமை வழித்தடங்களை உருவாக்குதல், தூசியைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை சிறப்பாக நிா்வகித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மூலம், தில்லியை சுத்தமான, மாசு இல்லாத நகரமாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்று முதல்வா் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.