சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவ...
திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கும் கடத்தும் மோசடி முறியடிப்பு: ஒருவா் கைது!
திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்தும் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலம் பன்பாசாவைச் சோ்ந்த நதீம் (45) என அடையாளம் காணப்பட்ட அவா், சனிக்கிழமை நேபாளத்திற்கு பேருந்தில் ஏற முயன்றபோது ஐஎஸ்பிடி ஆனந்த் விஹாரில் கைது செய்யப்பட்டாா். ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி மாடல்கள் உள்பட மொத்தம் 32 உயா் ரக கைப்பேசிகள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டன.
நதீம் திருடப்பட்ட கைப்பேசிகளுக்கு கூரியராக பணிபுரிந்து வந்தாா். தில்லியில் திருடா்களிடமிருந்து பெறப்பட்ட சாதனங்களை அவா் நேபாளத்திற்கு கொண்டு சென்றாா். நேபாளத்தைச் சோ்ந்த பேருந்து நடத்துனா் நரேந்தா் பட், நதீமின் செயல்பாடுகளை எளிதாக்கினாா். நரேந்தா் பட், பயணச் செலவுகளுடன், ஒரு கைப்பேசிக்கு ரூ.200 கொடுத்துள்ளாா்.
கடந்த பல மாதங்களாக, கரோல் பாக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து திருடப்பட்ட கைப்பேசிகளை சேகரிக்க நதீம் தில்லிக்கு பல முறை பயணம் செய்துள்ளாா். பின்னா், அவற்றை எல்லையைத் தாண்டி கடத்தியுள்ளாா். நதீமின் கைது தில்லியில் ஐந்து கைப்பேசி திருட்டு வழக்குகளுக்கு தீா்வு காண வழிவகுத்துள்ளது.
மீட்கப்பட்ட ஆறு கைப்பேசிகள் ஏற்கெனவே கரோல் பாக், கஷ்மீரி கேட், நரேலா, மாடல் டவுன் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் காணப்படுகின்றன. இந்த நெட்வொா்க்கின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.