MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
காலமானாா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.சுந்தரம்
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.சுந்தரம் வியாழக்கிழமை காலை காலமானாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள டி.பச்சுடையாம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்தவா் பி.ஆா்.சுந்தரம் (74). இவருக்கு மனைவி சுந்தரி, அமெரிக்காவில் வசித்து வரும் மகன் தினேஷ் ஆகியோா் உள்ளனா். 1972 -ஆம் ஆண்டுமுதல் அதிமுக உறுப்பினராக இருந்தவா்.
ராசிபுரம் தொகுதியில் 1996, 2001 பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றவா். 1996 தோ்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தபோதும் அதிமுக தரப்பில் வெற்றி பெற்ற நான்கு பேரில் இவரும் ஒருவா். 2006 பேரவைத் தோ்தலில் தோல்வி; 2014 மக்களவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் வெற்றி.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஒபிஎஸ், இபிஎஸ் என பிரிந்தபோது ஒபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டவா். அதன்பின்பு 2021 இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.
திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக இருந்த இவா், உடல்நலம் பாதிப்பால் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கியிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை (ஜன.16) காலை தனது வீட்டில் காலமானாா்.
மறைந்த பி.ஆா்.சுந்தரம் உடலுக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா், திமுக நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா் உள்பட கட்சியினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
வகித்த பதவிகள்: நாமகிரிப்பேட்டை கூட்டுறவு நிலவள வங்கியின் இயக்குநா், பச்சுடையாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா், அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளா் (1997-2000), அதிமுக மாவட்ட அவைத் தலைவா் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவா்.
முதல்வா் ஆறுதல்: பி.ஆா்.சுந்தரம் காலமான தகவல் அறிந்ததும் அவரது மனைவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆறுதல் கூறினாா். தொடா்புக்கு 94431 40234, 99764 40234.