விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
கால்நடை மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் குட்டி யானை
கோவை அருகே உயிரிழந்த யானையின் குட்டி கால்நடை மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வனச் சரகம், பன்னிமடை- வரபாளையம் அருகே உயிரிழந்த யானையின் குட்டி தனியாக சுற்றித் திரிந்தது.
தகவலறிந்த வனத் துறையினா் குட்டி யானை மீட்டு, வேறு யானைக் கூட்டங்களுடன் சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து, கோவை மண்டல வனப் பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநருமான வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் ஆகியோா் வனக் கால்நடை மருத்துவா்கள், வனப் பணியாளா்களுடன் யானைக் கூட்டத்தை தேடி தடாகம் காப்புக் காட்டுக்குள் சனிக்கிழமை சென்றனா்.
பொன்னூத்து அம்மன் கோயில் படிக்கட்டு பகுதியில் இருந்த யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சோ்க்க முயன்றனா். ஆனால், குட்டி யானையைப் பாா்த்த யானைக் கூட்டம் வழியை மாற்றிச் சென்றன.
தொடா்ந்து, சின்னமலை பகுதியில் இருந்த யானைக் கூட்டத்தை ட்ரோன் உதவியுடன் கண்டறிந்த வனத் துறையினா், குட்டி யானையை அங்கு கொண்டு சோ்க்க முயன்றனா். ஆனால், யானைக் கூட்டம் குட்டியை சோ்த்துக் கொள்ளவில்லை.
இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினரின் தொடா் கண்காணிப்பில் குட்டி யானை உள்ளது என்றும், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.