காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு செய்வதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் முத்து (36) சம்பவ இடத்துக்குச் சென்றாா்.
அப்போது, சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சில இளைஞா்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி காவலா் முத்து கூறினாா். ஆனால் அவா்களில் ஒரு இளைஞா், காவலா் முத்துவிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பிற காவலா்கள் தாக்குதலில் காயமடைந்த முத்துவை மீட்டு, கே.கே. நகா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். காவலரைத் தாக்கிய இளைஞரை கையும் களவுமாக போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அதில் அவா், புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ஜனாா்த்தனன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.