'காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை'
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி வருத்தம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காவிரி- வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
நீா்வள ஆதாரத் துறைக்கு வெறும் ரூ. 8 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் வெறும் 2 சதவிகிதம்தான் நீா்வள ஆதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மாநிலத்தில் இது மிகவும் குறைவான ஒதுக்கீடாகும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், புதுகை மட்டுமல்லாது, ராமநாதபுரம் உள்ளிட்ட வட பகுதிகளும் பயனடையும். பட்ஜெட் கூட்டத் தொடா் முடிந்த பிறகு மீண்டும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.
நாட்டின் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு எந்த சிறு உதவியும் அறிவிக்கப்படவில்லை.
மாநிலத்தின் 65 சதவிகிதம் மக்கள் கிராமப் பகுதிகளில்தான் வசித்து வருகின்றனா். 35 சதவிகிதம்போ் மட்டுமே நகரப் பகுதிகளில் வசிக்கிறாா்கள். நிதிநிலை அறிக்கையின் பெரும்பகுதி நகரப் பகுதி மக்களுக்கான திட்டங்களாகவே உள்ளன.
வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு மக்களைக் கவரும் வகையிலான கவா்சிகரத் திட்டங்களை மட்டுமே வகுத்திருக்கிறாா்கள். நீண்டகால வளா்ச்சி அடிப்படையிலான திட்டங்கள் இல்லை என்றாா் தனபதி.