கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா
காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு விவகாரத்துக்கும் தீா்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பதிலளித்து கூறியதாவது: உலகளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளை அதிபா் டிரம்ப் கையாண்டு வருகிறாா். காஷ்மீா் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடிப் பிரச்னைக்கு அந்த இரு நாடுகளும் தீா்வு காண்பதே சரியானது.
அண்மையில் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
மோடி-டிரம்ப் சிறந்த நண்பா்கள்: அதிபா் டிரம்ப்-இந்திய பிரதமா் நரேந்திர மோடி இருவரும் சிறந்த நண்பா்கள். அண்மையில் 75-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய பிரதமா் மோடிக்கு தொலைபேசி வாயிலாக அதிபா் டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததே இதற்கு சான்று. க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதை சரிசெய்வதற்கான தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ-இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் நேரில் சந்தித்து கலந்துரையாடினா். அப்போது வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஐரோப்பாவும் இந்தியாவும்: உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதே டிரம்ப்பின் நிலைப்பாடு. அதற்காகவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளின் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ரஷியாவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் ஐரோப்பா ஒன்றியத்துக்கும் அமெரிக்கா கடும் அழுத்தத்தை தந்து வருகிறது. சீனாவை வேறு வழிகளில் அரசு கையாண்டு வருகிறது என்றாா்.