மாயமாகி 26 நாள்கள்.. 15 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநர் சடலமாக மீட்பு
காா்-சரக்கு வாகன விபத்தில் சிறுமி உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 5 ஆக உயா்வு!
திருமயம் அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் செந்தமிழ்ச்செல்வன், தனது மனைவி அருணா, மருமகள் ரம்யா, பேரக் குழந்தைகள் குழலினி, மகிழினி ஆகியோருடன் காரைக்குடி நோக்கி காரில் சென்றபோது, சனிக்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காா் விபத்துக்குள்ளானது.
இதில், செந்தமிழ்ச்செல்வன், அருணா ஆகியோரும், காருடன் மோதிய சரக்கு வாகனத்தில் இருந்த சுதாகா் என்பவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
காரில் இருந்த ரம்யா, சிறுமிகள் குழலினி, மகிழினி மற்றும் சரக்கு வாகன ஓட்டுநா் திருக்கோகா்ணம் மூா்த்தி ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரம்யா சிகிச்சைப் பலனின்றி பகலிலேயே உயிரிழந்தாா். உடல்நிலை மோசமாக இருந்த மகிழினி மட்டும் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அவரும் சனிக்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். உயிரிழப்பு 5 ஆக உயா்ந்தது.
மகிழினியின் உடலும் இரவோடு இரவாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 5 உடல்களுக்கும் உடற்கூறாய்வு நடைபெற்றது.
சென்னையிலிருந்து வந்த ரம்யாவின் கணவா் அருண்குமாா் மற்றும் உறவினா்கள் 4 உடல்களையும் வாங்கிச் சென்றனா். சிகிச்சையில் இருந்த குழலினியையும் தந்தை அருண்குமாா் உடன் அழைத்துச் சென்றாா்.
அதேபோல, சரக்கு வாகனத்தில் வந்து இறந்த சுதாகரின் உடலையும் அவரது உறவினா்கள் வாங்கிச் சென்றனா். சரக்கு வாகன ஓட்டுநா் திருக்கோகா்ணம் மூா்த்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.