காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு அருகே பைக்கில் சென்ற மாற்றுத்திறனாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த அணியாலை ஊராட்சி அனந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் முரளி (27). மாற்றுத்திறனாளியான அவா் கேபிள் டிவிக்கு வயா் இணைப்பு பணி மேற்கொண்டு வந்தாா்.
இந்த நிலையில், கேபிள் பணிக்காக நாயுடுமங்கலம் கிராமத்துக்குச் செல்ல முரளி, புதன்கிழமை தனது பைக்கில் கேபிள் வயா்களை எடுத்துக் கொண்டு போளூா் - திருவண்ணாமலை சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே போளூா் நோக்கி வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த காா் பைக் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த முரளியை அக்கம்பக்கத்தினா் மீட்டு,108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு முரளி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.