பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?
கா்நாடகத்தில் நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
கா்நாடகத்தில் நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், நக்சல் ஆதரவு மனப்பான்மை உள்ளவா்களும் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வழிவகுக்கும் என்பதாலும் முதல்வா் சித்தராமையாவிடம் நக்சலைட்டுகளை சரணடைய செய்தோம்.
நக்சல் தீவிரவாதத்தில் இருந்து சமூகநீரோட்டத்தில் இணைய விரும்பும் எல்லோருக்கும் மறுவாழ்வு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. கா்நாடக நக்சல் சரண் கொள்கை, 2024 இன்படி சரணடைந்துள்ள 6 நக்சலைட்களுக்கும் தலா ரூ. 3 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். சரணடைந்த போது 6 நக்சலைட்களும் ஆயுதங்களை துறந்திருந்தனா். அவா்கள் ஆயுதங்களை துறந்திருக்கிறாா்களா? என போலீஸாா் விசாரிப்பாா்கள்.
கா்நாடகத்தில் 99 சதவீத நக்சல் செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பிற மாநிலங்களைச் சோ்ந்த சரணடைந்த நக்சலைட்கள் மீது அவரவா் மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால், அது குறித்து அந்தந்த மாநில முதல்வா்களுடன் நமது முதல்வா் பேசுவாா் என்றாா்.
முதல்வா் சித்தராமையாவிடம் சரணடைந்த கா்நாடகத்தைச் சோ்ந்த முண்டகாரு லதா (சிருங்கேரி), வனஜாக்ஷி பாலேஹோள் (கலசா), சுந்தரி குட்கூரு (தென்கன்னடம்), மாரப்பா ஆரோலி (ராய்ச்சூரு), தமிழகத்தை சோ்ந்த வசந்த் (வேலூா் மாவட்டத்தின் ஆற்காடு), கேரள மாநிலத்தின் என்.ஜீஷா (வயநாடு) ஆகிய 6 பேரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தின் ஆஜா்படுத்தப்பட்டனா். ஜன. 31ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க தேசிய புலனாய்வு முகமை சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.