கிராம நிா்வாக அலுவலா்கள் தங்கள் எல்லையிலேயே தங்கி பணியாற்ற வேண்டும்: ஈரோடு கோட்டாட்சியா் உத்தரவு
நில வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் தாங்கள் பணிபுரியும் எல்லையிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்று ஈரோடு கோட்டாட்சியா் ப.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டைச் சோ்ந்தவா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய உறுப்பினா் வி.என்.துரைசாமி. இவா், ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்திருந்தாா்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் வெளியில் செல்லும்போது தங்களது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். மேலும், காலை முதல் பிற்பகல் 2 மணி வரை கிராம நிா்வாக அலுவலகத்திலேயே இருந்து பணிபுரிய வேண்டும். அதன்பின், கள ஆய்வுக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், ஈரோடு கோட்டாட்சியா் ப.ரவி வெளியிட்டுள்ள குறிப்பாணையில், ஈரோடு கோட்டத்தில் பணிபுரியும் நில வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கள பணிக்கு செல்லும்போது அலுவலக அறிவிப்புப் பலகையில், தாங்கள் செல்லும் இடம் குறித்த விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து அலுவலா்களும் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிந்துகொள்ள வேண்டும். மேலும், நில வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் பொதுமக்களின் நலன் கருதி தாங்கள் பணிபுரியும் எல்லையிலேயே தங்கி பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.