இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
''கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள்; எங்களுடன் நில்லுங்கள்'' - வேண்டுகோள் வைத்த பெண் ஒலிம்பியன்!
சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கானிஸ்தான் பெண் ஒலிம்பியன் ஃப்ரிபா ரெசாயி. யார் இந்த ஃப்ரிபா ரெசாயி? இவர் ஏன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களிடம் இப்படியொரு கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்?
ஃப்ரிபா ரெசாயி, 2004-ல் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சார்பில் ஜூடோவில் பங்கேற்றவர். 2021-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சிக்கு வந்தபோது விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு குறித்து முதலில் குரல் கொடுத்தவர்களில் ஃப்ரிபா ரெசாயியும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு என சொந்த விதிகள் வேண்டும் எனவும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்தும் என தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்காகவும், விளையாட்டுப் போட்டிகளில் பெண்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஃப்ரிபா ரெசாயி.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இந்த விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ள ஆப்கானிஸ்தானின் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) ஃப்ரிபா ரெசாயி விடுத்துள்ள உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் ஒன்றுதான் உலகளவில் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
''தலிபன் ஆட்சியால், பெண் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களே ஆப்கானிஸ்தானில் 'இல்லாதது போல்' நடந்துகொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட தடை விதித்துள்ளதால் ஐ.சி.சி உறுப்பினர் விதிமுறைகள் நேரடியாக மீறப்பட்டுள்ளன. அதனால், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணி மட்டும் கடந்த 18 மாதங்களில் மூன்று உலகளாவிய போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலிபன்கள் விளையாட்டுகளில் பாலின சமத்துவத்தை மீறியுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தவிர, பெண்கள் விளையாட விதித்துள்ள தடையை மாற்றும் நோக்கமும் அவர்களிடம் இல்லை. அதனால், இதை மாற்றுவது இப்போது நம் கையில்தான் உள்ளது. ஆண் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகள் இருப்பார்கள் என்பதை உறுதிசெய்யும் ஐ.சி.சியின் வாக்குறுதியால் மகிழ்ச்சியடைந்த போதும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் நாடு கடத்தப்பட்டோருக்கும் இது சாத்தியமாக இல்லை'' என கவலை தெரிவித்துள்ள ரெசாயி, ''ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணிக்கு ஆண்டுக்கு 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐ.சி.சி.யில் இருந்து நிதியாக தரப்படுகிறது. ஆனால், பெண் கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் ஜிம்மிற்கு செல்லவோ அல்லது நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் விளையாட்டுகளில் போட்டியிடவோ அனுமதிக்கப்படுவதில்லை.
அதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட மறுத்து, ஆப்கானிஸ்தான் பெண்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஃப்ரிபா ரெசாயி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...