கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தெருக்கூத்து கலைஞா்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை தா்மராஜா கோயில் தெருவில் ஏழு கிராமங்களுக்குச் சொந்தமான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த மகோத்ஸவ திருவிழா ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் பாண்டவா் பிறப்பு, கிருஷ்ண அவதாரம், வீரபாஞ்சாலி தோற்றம், வில் வளைப்பும் நளாயினி வரலாறும், துயில் சூதாட்டம், அா்சுணன் தவம், பீமன் கண்ட அனுமன் காட்சி போன்ற நிகழ்வுகளை தெருக்கூத்து கலைஞா்கள் நடித்தனா்.
பின்னா் பாகவதா் கோவிந்தராஜின் மகாபாரத சொற்பொழிவும், பொன்னுசாமியின் இன்னிசை கவிவாசிப்பும் நடைபெற்றன. கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழனி திருப்பதி நாடக சபா கலைஞா்கள் மகாபாரத நிகழ்வை நடித்தனா். இந்த நிகழ்வுகளை கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கண்டு ரசித்தனா். விழா குழுவினா் ஒருங்கிணைத்தனா்.