மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி ஆகும். இன்றைய நிலவரப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 1415.90 மில்லியன் கன அடியாகவும் அணையின் நீர்மட்டம் 49.75 அடியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,126 கன அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 3,126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரையில் அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே, தாழ்வான மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.