”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம்...
அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?
தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்க காவல்துறை அளித்திருக்கும் தகவலில்,``கடந்த 3-ம் தேதி சண்டா கிளாரா பகுதியிலிருந்து எங்களுகு கத்திக் குத்து சம்பவம் நடந்திருப்பதாக புகார் வந்தது.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு நிஜாமுதீன் கையில் கத்தியுடன், தன் அறைத் தோழரைத் தாக்கிவிட்டு நின்றிருந்தார். அவரை கத்தியைக் கீழே போட்டு சரணடையக் கூறினோம்.

ஆனால், அவர் எங்களையே தாக்க வந்தார். அதனால், துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் படுகாயமடைந்தார், அதே நேரத்தில் காயமடைந்த அவரது அறைத் தோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகள் மீட்கப்பட்டன" எனத் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், கொல்லப்பட்ட நிஜாமுதீனின் லிங்க்ட் இன் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தப் பதிவில், ``EPAM Systems வழியாக Google-லில் பணிபுரிந்ததேன்.
அங்குதான் ஏற்றுக்கொள்ளவே முடியாதளவு இன வேறுபாடு, விரோதம், பழிவாங்குதல் என மோசமான துன்புறுத்தலை எதிர்கொண்டேன்.
அதோடு, நிறுவனமும் என்னிடம் சம்பள மோசடிச் செய்தது. எனக்கு நியாயமான ஊதியம் வழங்கவில்லை. இனவெறி நபர் மற்றும் குழுவின் உதவியுடன் அவர்கள் தங்கள் துன்புறுத்தல், பாகுபாடு, அச்சுறுத்தும் நடத்தையைத் தொடர்ந்தனர்.
சமீபத்தில், நிலைமை மோசமாகிவிட்டது. எனது உணவு விஷமாக மாற்றப்பட்டது. இப்போது அநீதிக்கு எதிராகப் போராடியதற்காக எனது தற்போதைய குடியிருப்பிலிருந்தும் வெளியேற்றப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிஜாமுதீன் அமெரிக்க குடிமக்களான இரண்டு அறை தோழர்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நிஜாமுதீனின் பதிவைத் தொடர்ந்து, நிஜாமுதீனின் குடும்பத்தினர், அமெரிக்காவில் நிஜாமுதீன் இன பாகுபாட்டை எதிர்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், நிஜாமுதீனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.