ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்
வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!
கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்புற மக்களும் அறியாமையால் இவர்களிடம் செல்கிறார்கள். இதேபோல, போலி கால்நடை மருத்துவர்களும் பெருகிவிட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (18-9-2025), வேலூர் எஸ்.பி மயில்வாகனன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து, போலி மருத்துவர்களைக் கண்டறிந்து கைது செய்ய சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையில், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த துக்கா ராம் (வயது 53), குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி அவ்வை நகரைச் சேர்ந்த பெல்லியப்பா (51), பிச்சனூர் வாரியார் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி ஜோதி பிரியா (40), காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ரேவதி (36) ஆகிய நான்கு பேரும் பிளஸ் டூ வரை படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

அதேபோல, பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 14 பேர் வீடுகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அதில், மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (51) என்பவர் வீட்டிலேயே மருந்து, மாத்திரைகளை வைத்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததை கண்டுபிடித்து, அவர்களையும் கைது செய்தனர்.
ஒடுகத்தூர் குருவராஜபாளையம் கிராமத்தில் சுப்பிரமணி மனைவி விமலா (47), கே.வி.குப்பம் அருகிலுள்ள மயிலாடுமலை கிராமத்தில் செல்வராஜ் (61) ஆகியோரும் போலியாக மருத்துவம் பார்த்துவந்ததாக பிடிபட்டிருக்கின்றனர். மாவட்டம் முழுவதும், நேற்று ஒரே நாளில் 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். `இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.