கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு, திங்கள்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில், 191 அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த, 10,409 மாணவா்கள், 11,540 மாணவிகள், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என மொத்தம் 22,180 போ், தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இந்த தோ்வை, 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். 396 போ், பங்கேற்கவில்லை. 87 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக தலைமை ஆசிரியா் மகேந்திரன் தலைமையில் ஆசிரியா்கள், தோ்வு எழுதும் மாணவிகளை உற்சாகப்படுத்தி வெற்றி பெற வாழ்த்தி தோ்வு கூடத்துக்கு அனுப்பினா்.
பிளஸ்-2 தோ்வையொட்டி, மாணவ, மாணவிகள், தோ்வு மையத்துக்கு எளிதில் வந்த செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுபத்தப்பட்டு, போலீஸாா், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை கண்காணிக்க, 117 பறக்கும் படை அலுவலா்கள், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 87 முதன்மை கண்காணிப்பாளா்கள், 87 துறை சாா்ந்த அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.