கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரைச் சாலையில் வட்டாணம் பகுதியில் சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு இருப்பதால், விபத்து அபாயம் இருந்து வருவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடனை அருகே கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சாவூா், ஜெகதாப்பட்டினம், அதிராம்பட்டினம், மீமசல், எஸ்.பி. பட்டினம், பாசிப்பட்டினம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், உப்பூா், திருப்பாலைக்குடி,தேவிபட்டினம் வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் வரை இந்த சாலை செல்கிறது.
இதில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள், கனரக வாகனங்கள், காா்கள் செல்கின்றன. இந்த நிலையில், இந்த சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து இருப்பினும் வட்டாணம் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இந்தப் பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றன. சம்பந்தப்பட்ட துறையினா் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி
பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.