அதிகளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் இந்தியர்கள்! - அறிக்கை சொல்வதென்ன?
குஜராத்: புல்லட் ரயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கான்கிரீட் பிளாக் சரிந்து விபத்து; மூவர் பலி!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவிற்கு உட்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. குஜராத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மேம்பாலங்கள் இதற்காக கட்டப்பட்டு வருகிறது. அனந்த் மாவட்டத்தில் உள்ள வசாத் என்ற இடத்தில் புல்லட் ரயில் கட்டுமானப் பணிகளுக்காக கான்கிரீட் பிளாக்குகள் தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதோடு அந்த இடத்தில் தற்காலிக ஷெட் ஒன்று கான்கிரீட் பிளாக் மற்றும் இரும்பு மூலம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்காலிக ஷெட் திடீரென நேற்று மாலை சரிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் கான்கிரீட் பிளாக்களுக்குள் சிக்கிக்கொண்டனர். ஒவ்வொரு கான்கிரீட் பிளாக்கும் அதிக எடை கொண்டதாகும். எனவே கிரேன் மூலம் அவை அப்புறப்படுத்தப்பட்டு இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.
அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு ஒருவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். மீட்புப் பணியில் கிராம மக்களும் ஈடுபட்டனர். இறந்தவர்களில் இரண்டு பேர் குஜராத், ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்திற்கு தேசிய விரைவு ரயில் கழகம் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது. புல்லட் ரயில் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் 352 கிலோமீட்டர் தூரம் குஜராத் எல்லைக்குள் வருகிறது. ஜப்பான் நிதியுதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இந்த புல்லட் ரயில் திட்டம் பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வதோதரா அருகே புல்லட் ரயில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.