'அதே தான்' தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை! - எவ்வளவு தெரியுமா?
குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: குறைதீா் முகாமில் புகாா்
குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, மதுரை மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் புகாா் தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயா் வ. இந்திராணி பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினாா். குடிநீருடன், கழிவுநீா் கலப்பு : இந்த முகாமுக்கு 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயராமன், கழிவுநீா் கலந்த குடிநீா் புட்டியுடன் வருகை தந்தாா்.
அவா், ஆரப்பாளையம் அப்பளம் தயாரிப்பு கம்பெனி, காா்ப்பொரேஷன் குடியிருப்பு 2, 3-ஆவது தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் 3 மாதங்களாக புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேயா் வ.இந்திராணியிடம் தெரிவித்தாா். இதுதொடா்பான புகாா் மனுவையும் அவா் அளித்தாா்.
இதையடுத்து, 58-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். நிகழ்வில் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.