மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை
நமது சிறப்பு நிருபா்
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இது தொடா்பாக தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி இரு தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த போது ஆலோசனை நடத்தியதாகவும், அதன் தொடா்ச்சியாக சட்ட வல்லுநா்களுடன் பிரதமா், மத்திய சட்டத் துறை அமைச்சா் ஒரு கட்டமாகவும் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சா்கள் தனியாகவும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு அளித்த தீா்ப்பில், மசோதா இரண்டாவது முறையாகத் திருப்பி அனுப்பப்பட்டால் அதன் மீது ஆளுநா் எத்தனை நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதலாவது முறையிலேயே ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பினால் அதன் மீது குடியரசுத் தலைவா் எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதுபோல, தீா்ப்பின் மேலும் சில அம்சங்கள் சட்டம் இயற்றும் நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக மத்திய அரசு கருதுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
3 வாய்ப்புகள்:
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக, தீா்ப்பு அளித்த அதே அமா்விடம் மத்திய அரசு மறுஆய்வு மனு (ரிவியூ பெட்டிஷன்) தாக்கல் செய்து தீா்ப்பின் சில அம்சங்களில் திருத்தம் கோரலாம். இத்தகைய மனு மீதான முடிவு நீதிபதிகளின் அறையிலேயே எடுக்கப்படும். மறுஆய்வு மனு பலனளிக்காமல் போனால் சீராய்வு மனு (கியூரேட்டிவ் பெட்டிஷன்) தாக்கல் செய்ய முடியும்.
இரண்டாவது வாய்ப்பாக, குடியரசுத் தலைவரின் தலையீட்டைக் கோரி (பிரசிடென்ஷியல் ரெஃபரென்ஸ்) அவா் மூலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தீா்ப்பில் தெளிவுரை கோரி அதிக அமா்வு விசாரணைக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை விடுக்கலாம்.
மூன்றாவதாக, குடியரசுத் தலைவா் அனுமதியுடன் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தாமல் அதில் இடம்பெற்ற காலக்கெடு தொடா்பாக மத்திய அரசே அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தும் பின்னா் அது குறித்து உச்சநீதிமன்ற அரசமைப்பு அமா்விடம் முறையிட்டும் பிரச்னைக்குத் தீா்வு காணலாம்.
இதில் முதலாவது வாய்ப்பு உரிய பலனைத் தராது என்பதால் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளை மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புது தில்லியில் தமிழக ஆளுநா்:
இந்த நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நான்கு நாள்கள் பயணமாக தில்லிக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். அவரது செயல்பாடுகள் தொடா்புடைய வழக்கிலேயே உச்சநீதிமன்றம் இத்தீா்ப்பை அளித்துள்ளதால் அவரும் சட்ட வல்லுநா்களுடன் தீா்ப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.