குட்கா விற்ற கடைக்காரா் கைது
தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
தம்மம்பட்டி கடைவீதியில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ஆனந்த்குமாா் (45). இவா் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா விற்பதாக தம்மம்பட்டி போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை செய்தனா். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 12 கிலோவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடைக்காரா் ஆனந்த்குமாரை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு ஆஜா்படுத்தினா்.