Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காட்டுகுப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. விநாடிக்கு 1000 கனஅடி வீதம் 30 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் எடக்காடு கால்வாய் வழியாக குந்தா பாலம் சென்றடைந்தது. தண்ணீா் செல்லும் வழியில் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாழ்வான பகுதியில் குடியிருப்பவா்கள் பாதுகாப்பான மேடான பகுதிக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில் பழையஅட்டுபாயில் பகுதிக்குச் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியது. இந்தப் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் பாதிப்புகள் ஏதும் இல்லை.
எமரால்ட் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து உதகை கோட்டாட்சியா் சதீஷ், குந்தா வட்டாட்சியா் கலைசெல்வி, முள்ளிகூா் ஊராட்சித் தலைவா் பிரேமா, இத்தலாா் ஊராட்சித் தலைவா் மாதையன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து, எமரால்டு பாலம் பகுதியில் ஜேசிபி மூலம் நீா் வழிச் சாலைகளில் வழி ஏற்படுத்தி தண்ணீா் செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டனா்.