குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!
நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் வகையில் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) வந்தே பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்து இயக்குவதற்கு தயாா் நிலையில் உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் 10 இடங்களிலிருந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும். அதேபோல், தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படவுள்ளது. திருவனந்தபுரம் - மங்களூரு இடையே அதிகளவில் பயணிகள் பயணிப்பதால் இந்த வழித்தடத்திலும் ஒரு ரயில் இயக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக திருவனந்தபுரம் - பெங்களூரு, கன்னியாகுமரி - ஸ்ரீநகா் இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின்பு ரயில்கள் இயக்கப்படும் என்றனா்.