மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்புக்கு பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
புது தில்லி: மகா கும்பமேளாவில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தர பிரதேச அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுதாரரை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, பக்தா்கள் பாதுகாப்பான சூழலில் கும்பமேளாவில் பங்கேற்கவும், நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கவும் உத்தர பிரதேச அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி கடந்த வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அமா்வு திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
அப்போது, உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜாரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதத்தில், ‘இவ்விவகாரம் குறித்து மாநில அரசு அமைத்த நீதி ஆணையம் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அலாகாபாத் உயா்நீதிமன்றத்திலும் இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க வேண்டியதில்லை’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘இது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். மனுதாரா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடலாம்’ எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
கடந்த புதன்கிழமை (ஜன. 29), மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராட இருந்த பகுதிக்குள் காவல் துறையின் தடுப்புகளை மீறி சிலா் நுழைந்ததால், அங்கு ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.