Doctor Vikatan: விடுமுறை நாள்களில் சாப்பாடு, தூக்கம்; மறுபடி சாப்பாடு, ரிப்பீட் ...
குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்
ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாராத அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. செய்யறிவால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பல தொழில் துறைகள் பாதிப்படையும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் ஏஐ வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் புற்றுநோயின் ஆரம்ப நிலையைக் கண்டறிவதில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அந்தவகையில் ஒருவரின் குரல் பதிவு, குரல் தொனி, அதன் தெளிவு ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் இருக்கிறதா என்று ஏஐ கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
'ஃபிரன்டியர்ஸ் இன் டிஜிட்டல் ஹெல்த்' இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குரல் பதிவில் இருந்து குரல் மடிப்புகளில் அசாதாரணங்கள் அல்லது புண்களைக் கண்டறிவதற்கான ஏஐ மாதிரிகளை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்றும் குரல் ஒலியில் உள்ள மாற்றங்கள், அசாதாரணங்கள், குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஏனெனில் தற்போதைய புற்றுநோய் கண்டறிதல் முறைகளான எண்டோஸ்கோபி, பயாப்ஸிகள் ஆகியவை புற்றுநோயை அருகில் உள்ள திசுக்களுக்கு பரப்பிவிடும்.
'ஃப்ரிட்ஜ்2ஏஐ வாய்ஸ்' தரவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட 306 பேரின் 12,500-க்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் குரல் பதிவில் இரைச்சல் விகிதம் மாறுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது குரல் பதிவின் இரைச்சல் விகிதத்தின்அடிப்படையில் ஆரோக்கியமான குரல்வளை, புண்கள் அல்லது பிரச்னைகள் உள்ள குரல்வளை என வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஆண்களின் குரல்வளைகளில் உள்ள வித்தியாசங்கள் எளிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பெண்களின் குரல்வளைகளில் பிரச்னைகள் இருக்கிறதா என ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. எனினும் அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறினர்.
குரல் பதிவுகளில் ஏற்படும் மாற்றம் காலப்போக்கில் எவ்வாறு உருமாறுகின்றன என்பதைக் கண்காணிப்பதிலும் ஆரம்ப கட்டத்தில் ஆண்களில் குரல்வளை புற்றுநோயைக் கண்டறிவதிலும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து குரல் பதிவுகளில் ஏஐ-யைப் பயன்படுத்தி மேலும் ஆய்வு மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டுள்ளது.
Researchers have found that voice features in recordings could help detect early warning signs of cancer of the larynx (voice box)
இதையும் படிக்க |மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?