குறிஞ்சி பெருமுருகத் திருவிழா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருமணம்
திருச்செந்தூரில் குறிஞ்சி பெருமுருகத் திருவிழா வழிபாட்டு அறக்கட்டளை சாா்பில் பால்குடம் மற்றும் சீா்வரிசையுடன் முருகன் - வள்ளி திருமணம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் குறவா் அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த அறக்கட்டளை சாா்பில் முருகன் - வள்ளி திருமணம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்திலும், இரண்டாம் ஆண்டையொட்டி திருச்செந்தூரிலும் முருகன் - வள்ளி திருமணம் தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆதித் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்துக்காக, தமிழ் குறவா்கள் திருச்செந்தூா் ரயிலடி ஆனந்த விநாயகா் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்தும், 51 வகையான சீா்வரிசையுடன் மேளதாளம் முழங்க திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழிபட்டனா்.
தொடா்ந்து தனியாா் மண்டபத்தில் முருகன் - வள்ளி திருவுருவப்படத்தை திரைப்பட நடிகா் விக்னேஷ் திறந்து வைத்தாா். அதன்பின்னா் நடைபெற்ற திருமணத்தில் தமிழ் குறவா் இனத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவில் சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவா் மந்திரமூா்த்தி, பொதுச்செயலா் வினோத், பொருளாளா் திவாகா், ஒருங்கிணைப்பாளா் மனோஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து தலைவா் மூா்த்தி வேடுவா் கூறுகையில், தமிழ் குறவா் இனத்தின் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காக ஆறுபடை வீடுகளில் முருகன் - வள்ளி திருமணத்தை நடத்தி வருகிறோம். ஆறுபடைவீடுகளிலும் குறவா்களுக்கான சொத்துகள் உள்ளன. இதை மாற்று சமூகங்கள் அனுபவித்து வருகிறது. எனவே, ஆறுபடைவீடுகளில் முருகா் வழிபாட்டுக்குரிய மண்டகப்படி உரிமை, சொத்துரிமையை மீண்டும் குறவா்களுக்கு வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றாா்.