பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
`குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்' - அண்ணா பல்கலை., சம்பவம் குறித்து ஜோதிமணி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி,
“எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரல் கொடுக்க வேண்டியது அனைவரது கடமை. பாலியல் விவகாரம் தாண்டி பெண்கள் மீது எந்த ஒடுக்குமுறை நடந்தாலும், அதனை கண்டிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருக்கிறது. பல்கலைக்கழக வளாகமே பாதுகாப்பு இல்லாமல் இருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமன்றி, அனைத்துக் கல்வி நிறுவனங்களையுமே பெண்களுக்கு பாதுகாப்பான நிறுவனங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அண்ணா பல்கலைக்கழக சம்பவமாக மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. காஷ்மீர், மணிப்பூர், உ.பி போன்ற மாநிலங்களில் எல்லாம் பெண்களுக்கு எதிரான கடுமையான நெஞ்சை உலுக்கக்கூடிய குற்றங்கள் நடந்தபோது ஒன்றிய பா.ஜ.க அரசு குற்றவாளிகளை பாதுகாக்கின்ற அவமானகரமான செயலைச் செய்து பெண்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள். தற்போது, இங்கு தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை நான் பாராட்டுகின்றேன். பெண்களுக்கு நடக்கின்ற குற்றங்கள் குறித்தும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்ற பெண்கள் தைரியமாக வெளியே சொல்லுகின்ற போது சமூகம் பாதிப்பிற்கு உள்ளான பெண்ணை தான் குற்றவாளியாகவும், அந்த பெண்ணை தான் ஆயிரம் கேள்விகள் கேட்கக்கூடிய சமூகமாகவும் குற்றவாளியை பற்றி சிந்திக்காத துரதிஷ்ட வசமான சமூகமாகவும் நாம் இருக்கின்றோம். அந்த மாதிரி சூழலில் கூட நமக்கு எதிராக நடந்த குற்றத்தை உடனே காவல்துறையிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை நான் பாராட்டுகின்றேன். இது, அனைத்து பெண்களுக்கும் முன் உதாரணம். ஆன்லைனிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நானே பா.ஜ.க-வினரால் அந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளேன். இதுபோன்ற கொடுமைகளை வெளியே பேச வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வழக்கில் எஃப்.ஐ.ஆர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோடு வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. இதேபோன்று, அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது காவல்துறை உயர் அதிகாரி அந்த சம்பவத்தில் புகார் அளித்தவர்களையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் கூறிய சம்பவமும் இங்கு நடந்துள்ளது. இதற்கு அர்த்தம் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இதுபோன்று செய்தால் உங்களுக்கும் இதுதான் நடக்கும் என்று சொல்வதைப் போன்றது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோடு குற்றப்பத்திரிகை வெளியாவதோ, எஃப்.ஐ.ஆர் வெளியாவதோ பெண்களை தொந்தரவு செய்வது போன்றது. இதற்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டத்தை மாற்றியமைத்ததால் இது போன்ற எஃப்.ஐ.ஆர் கசிவு சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுவதை வைத்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களுகளின் பெயர்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உள்துறை அமைச்சரிடம் நானும் பேச உள்ளேன். இதுபோன்ற சம்பவத்தில் நமக்கு சமரசமே கிடையாது. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது பிரச்னை கிடையாது. ஒரு பெண் பாதிக்கப்பட்டால் எந்தவித சமரசமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்றாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். பா.ஜ.க மாநில தலைவர் சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க-வில் கே.டி ராகவன் என்று ஒருத்தர் இருந்தார். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் மிகவும் அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாலியல் கொடூரத்தை நடத்தினார். அந்த காட்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். அப்போது, இதே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கமிட்டியை அமைத்தார். அந்த கமிட்டி ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் என்று அண்ணாமலை அப்போது கூறியிருந்தார். அந்த கமிட்டி என்னவானது? அவர்கள் கொடுத்த அறிக்கை என்னவானது?. அதற்காக, அவருக்கு 50 சட்டைகளை நாங்கள் அனுப்பலாமா?. அந்த சாட்டை சம்பவம் எப்போ நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். அண்ணாமலையின் உறவினர் வீட்டில் சோதனை நடக்கிறது. அந்த சோதனையில் 13 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டதாகவும், 250 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து, செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டால், ‘ஜோதிமணி, செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் எல்லாம் சொந்தம் தான்’ என்று கூறுகிறார்.
ஆனால், அக்காவின் கணவர் சிவக்குமார் அண்ணாமலைக்கு சொந்தமா, சொந்தம் இல்லையா?. அண்ணாமலையின் அக்கா கணவர் செங்கல் சூளை ஒன்றை நடத்துகிறார். அந்த செங்கல் சூளையில் பங்குதாரராக உள்ளவரிடம்தான் சோதனை நடத்தி ரூ.13 கோடி பணமும், ரூ. 250 கோடி மதிப்பிலான சொத்து ஆவணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அதனை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு சாட்டையால் அடித்துக் கொண்டது அரசியலாகிறதே தவிர வேற எந்த காரணமும் இல்லை. வேற எந்த காரணத்திற்காகவும் இது அரசியல் ஆக்கப்படவில்லை. அமலாக்கத்துறை எல்லா காலங்களிலும் உள் நோக்கத்தோடு செயல்படுகிறது என்று கூற முடியாது. சில நேரம் நோக்கத்தோடு செயல்படும் சில நேரம் தெரியாமல் சென்று சோதனை செய்வார்கள். இதே அமலாக்கத்துறை தான் பா.ஜ.க-வின் மேலாளராக இருக்கக்கூடிய நபரின் வீட்டிற்கு சென்றுவிட்டு தலைதெறிக்க ஓடி வந்தார்கள். இதேபோல், அண்ணாமலை உறவினர் வீட்டில்கூட அமலாக்கத்துறை தெரியாமல் கூட சோதனை நடத்தியிருக்கலாம். தொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டால் இந்த வழக்கிலாவது அவர்கள் முறையாக செயல்பட்டார்கள் என்று ஒத்துக் கொள்ளலாம். அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். அதற்கு ஏராளமான வசூல் நடந்தது. சிவகங்கையைச் சேர்ந்தவர் ஒரு வீடியோ பதிவைக்கூட வெளியிட்டார். இதற்குப் பிறகுதான் செங்கல் சூளையை அவர்கள் அமைத்தனர். அப்போதுதான், அமைத்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் பொதுவெளியில் கூட இருக்கிறது. பாலியல் குற்றம் நடக்கும்போது ஒரு அரசாங்கம் குற்றவாளியை கைது செய்கிறதா, குற்றவாளியை பாதுகாக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பொறுத்தவரை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளது தமிழக அரசு” என்று தெரிவித்தார்.