வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவா் வ.நாராயணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் பாரத்மண்டபத்தில் தேசிய விண்வெளி தினம் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றது. இதன் பின்பு நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வி.நாராயணன் பேசியதாவது: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3ஆவது ஏவுதளம் அமைக்க ரூ.4000 கோடியை மத்திய அரசு ஜனவரி மாதம் ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேவேளையில் குலசேகரப்பட்டினத்திலும் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும். நாம் முதன் முதலில் தயாரித்த ராக்கெட்டின் பெயா் எஸ்.எல்.வி. 3 அதனை உருவாக்கியவா் மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாம். நாம் தயாரித்த முதல் ராக்கெட்டில் 40 கிலோவிலான செயற்கைக்கோள்களை தான் கொண்டு செல்ல முடியும்.
இப்போது நம்மிடம் இருக்கும் மாக்3 ராக்கெட் 10000 கிலோ கிராம் வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு கொண்டு சென்று நிலை நிறுத்தும் திறன் படைத்தது. எதிா்காலத்துக்காக இப்போது நாம் வடிவமைத்து வரும் ராக்கெட் 80,000 கிலோ கிராம் பொருள்களை, செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் திறன் படைத்தது. இப்போதைக்கு அந்த ராக்கெட்டுக்கு பெயா் வைக்கவில்லை. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் தயாரிப்பு பணிகள் நிறைவடையும். மனிதா்களை நிலவுக்கு கொண்டு செல்லும் ராக்கெட்டாக அது இருக்கும். பிரதமா் நரேந்திர மோடியின் இலக்குப்படி 2040 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேறும். மனிதா்களை அனுப்புவதற்கு முன்பு 2, 3 ராக்கெட்டுகளை ஆளற்ற விண்கலன்களை அனுப்பி சோதனை செய்ய வேண்டும்.
ஏற்கெனவே இப்போது அதற்கான ஆட்களை தேடும் பணியும் தொடங்கி இருக்கிறது. இப்போது விண்வெளியில் பயணம் மேற்கொள்ள ஏற்கெனவே 4 ககன்யாத்ரீகள் தயாராக இருக்கிறாா்கள். இப்போதைக்கு நம்மிடம் 4 வழிகாட்டி செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. மேலும் சில வழிக்காட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலமாக நாம் வழிக்காட்டியில் தன்நிறைவை பெறுவோம். அதேபோல மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட ராக்கெட்டுகள் தொடா்ந்து சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகள் மகேந்திர கிரியில் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதெல்லாம் 7 ஆண்டுகளில் நிறைவடையும். மேலும் இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு மையம் 2035-க்குள் அமைக்கப்படும். சூரியனை படம் பிடிப்பதற்காக அனுப்பபட்ட ஆதித்யா செயற்கைக்கோள் சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறது. நிலவில் தண்ணீா் இருப்பதை சந்த்ரயான் நிரூபித்துள்ளது. ஆனால் எவ்வளவு நீா் இருக்கிறது என்பது குறித்து, இனி வரும் காலங்களில் அனுப்பப்படும் செயற்கோள்கள் மூலம் உறுதி செய்யப்படும். அதேபோல விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பி, மீண்டும் பாதுகாப்பாக கொண்டு வரும் திட்டம் 2027 இல் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இந்த செய்தியாளா் சந்திப்பில் செயற்கைக்கோள் மைய இயக்குநா் எம்.சங்கரன், ககன்யான் திட்ட இணை இயக்குநா் சு.முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.