விவசாயிகள் மிடுக்குடன் நடைபோட புதிய திட்டங்கள் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பாசனக் குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி வழியாக சுருளித் தீா்த்தம், கம்பம் ஆகிய பகுதிகளுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் உத்தமபாளையம்- கோகிலாபுரம் இடையே 210 ஏக்கரில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் முல்லைப் பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை தேக்கி வைத்து 3,000 ஏக்கருக்கு மேல் இரு போக நெல் விவசாயம் நடைபெறுகிறது. இந்த நிலையில், குளத்தின் கரையில் செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது மா்ம நபா்கள் தீ வைத்து எரித்து விட்டு, மேலும் குப்பைகளை கொட்டுகின்றனா்.
குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் எழும் புகை மண்டலத்தின் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனா். அத்துடன் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:
பாசன நீா் தேங்கும் தாமரைக்குளம் மாசடைந்து வருவதுடன், நெல் சாகுபடி செய்யும் விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, தாமரைக்குளத்தின் கரையில் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதுடன், நீா் நிலையை சம்பந்தப்பட்ட துறையினா் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.