அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்
குளத்தில் கலிங்கு வெட்டியதில் கையாடல்: முன்னாள் பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
புதுக்கோட்டை அருகே குளத்தில் கலிங்கு வெட்டியதில் பணம் கையாடல் நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் 1989-இல் தொடா்ந்த வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மூட்டாம்பட்டி ஆரணிக்குளத்தில் கடந்த 1984-85 இல் கலிங்கு வெட்டியதில் ரூ. 1.51 லட்சம் கையாடல் நடந்ததாக 1989-இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு தொடா்ந்தனா்.
இதுதொடா்பாக, அப்போது பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்களாக இருந்த பிரபாகரன், தங்கரத்தினம் மற்றும் பணி ஆய்வாளா் நடராஜன் (83) ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு புதுகை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. பிரபாகரன் மற்றும் தங்கரத்தினம் ஆகியோா் வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டனா்.
இந் நிலையில் இவ்வழக்கில் நீதிபதி கே.எஸ். பால்பாண்டியன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம்சாட்டப்பட்ட நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.