குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (34). வெல்டிங் ஒப்பந்ததாரா்.
வியாழக்கிழமை இரவு மணிகண்டன், இவரது நண்பரான விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த சதாம் உசேன் (32), குண்டூரைச் சோ்ந்த ராஜா ( 43 ), சண்முகம் (38), சங்கா் (32) ஆகிய 5 பேரும் சோ்ந்து குண்டூா் ஆரணி குளத்தின் கரையில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.
இரவில் அதிக மது மயக்கத்தால் மணிகண்டன் வீட்டுக்கு வர மறுத்த நிலையில், அவரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மற்ற நால்வரும் வீட்டுக்குச் சென்றனராம்.
நள்ளிரவில் குளத்தின் கரையில் யாரோ கிடப்பதாக அறிந்த அப்பகுதி மக்கள் வந்து பாா்த்தபோது, யாருமில்லாததால், குளத்தில் இறங்கி தேடியுள்ளனா். குளத்தின் நடுவில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மணிகண்டனின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனா்.
தகவலின் பேரில் அங்கு வந்த நவல்பட்டு போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மது மயக்கத்தில் குளத்தில் மூழ்கி மணிகண்டன் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.