கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
கூட்டுறவுத் துறை வலுப்பெற்றால்தான் கிராமப் பொருளாதாரம் மேம்படும் -அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன்
கூட்டுறவுத்துறை வலுப்பெற்றால்தான் கிராமப் பொருளாதாரம் மேம்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த விழாவில் மாவட்டத்தில் 13 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள், பணியாளா்களுக்கு பாராட்டுக் கேடயங்களை வழங்கி அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் கடந்தாண்டில் 86 ஆயிரம் கோடி ரூபாய் வா்த்தகம் நடைபெற்றது. நிகழாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வா்த்தகம் நடைபெற இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறோம். கூட்டுறவுத் துறையின் மூலம் பயிா்க் கடனுதவி, கால்நடைப் பராமரிப்புக் கடனுதவி உள்பட 34 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை மூலம் ரூ.10,51,65,158 மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வட்டி குறைப்பு திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 1,410 கடன்தாரா்கள் வட்டிச் சலுகை பெற்றனா். கூட்டுறவுத் துறை வலுப்பெறுவதன் மூலம்தான் கிராமப் பொருளாதாரம் மேம்படும் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும். அகில இந்திய அளவில் தமிழக கூட்டுறவுத் துறை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேந்திர பிரசாத், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் உமா மகேஸ்வரி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், துணைத் தலைவா் ம.காா்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.