கூழமந்தல் விநாயகா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி
காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ராகு, கேது பெயா்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் ராகு, கேது இருவரும் இணைந்து பரிவார தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனா். திருக்கணித பஞ்சாங்கப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பிரவேசித்தனா்.
இப்பெயா்ச்சியையொட்டி சிறப்பு ஹோமபூஜைகள் நடைபெற்று கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ராகு, கேது இரு கிரகங்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.