25 Years of Kushi: விஜய்க்கு 'டூ ஆர் டை' சூழ்நிலை; ஈகோ நிறைந்த கேரக்டருக்கு ஜோ செய்த விஷயம்! | Facts
இன்று நடிகராக மிரட்டிக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா 2000-ம் ஆண்டு இயக்குநராக செய்த சம்பவம்தான் 'குஷி'.
குறும்புதனமான விஜய், படபடவென வெடிக்கும் ஜோதிகா, விவேக்கின் காமெடி, தேவாவின் பாடல்கள் என இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் படத்தில் ரசிக்கக்கூடிய முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.

'குஷி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.
விஜய் அடித்த சூப்பர் ஹிட்
எஸ்.ஜே. சூர்யாவின் அறிமுக திரைப்படமான 'வாலி' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிறகு தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், தன்னுடைய தயாரிப்பில் படத்தை இயக்குவதற்குக் கேட்டிருக்கிறார்.
அதன் பிறகுதான் 'குஷி' ஐடியா க்ளிக்கானது. படத்தில் முதலில் சிம்ரனை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆனால், அதன் பிறகு கதாநாயகி ஜெனிஃபர் கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவின் பெயரை டிக் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு தயாரான முறை குறித்து அப்போதே சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார் ஜோதிகா.
ஜெனிஃபர் கதாபாத்திரம் குறித்து ஜோதிகா, "இந்தப் படத்தின் கதையை நான் கேட்டு முடித்ததும், பழைய நடிகைகளின் நடிப்பை இந்தப் படத்திற்குக் கொடுக்க வேண்டும் என இயக்குநர் கூறினார்.
படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் ஈகோ நிறைந்தது. அதனால், கோபப்படுவதையே கொஞ்சம் சற்று வேறு வடிவில் வெளிப்படுத்த முயற்சி செய்தோம்.

அது ஓவர் ஆக்டிங் கிடையாது. அந்த விஷயம் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தியும் இருந்தது." எனக் கூறியிருக்கிறார்.
'காதலுக்கு மரியாதை' வெற்றியைத் தொடர்ந்து விஜய், இயக்குநர் பாசிலுடன் 'கண்ணுக்குள் நிலவு' படத்திற்காக இணைந்தார். இப்படத்தில் விஜய்யின் நடிப்பு மிகவும் தனித்துவமானது. சொல்லப்போனால், சவால் நிறைந்ததும்கூட!
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது 'குஷி' படத்திற்கும் தேதிகள் கொடுத்து நடித்து வந்தார்.
'கண்ணுக்குள் நிலவு' படத்தின் கேரக்டரிலிருந்து 'குஷி' படத்தின் சிவா கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் மாற்றி மாற்றி நடிப்பது விஜய்க்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்தப் படத்தின் வெற்றி அப்போது விஜய்க்கு ரொம்பவே முக்கியமானதாக இருந்திருக்கிறது. "'டு ஆர் டை' என்கிற சூழ்நிலையில், இந்த திரைப்படமும் ஓடவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தப் படத்தின் வெற்றியை எனக்குக் கொடுத்தார் எஸ்.ஜே. சூர்யா.
அவருக்கு நன்றி!" என 'இசை' படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் அதை நினைவு கூர்ந்து பேசியிருப்பார் விஜய்.
இந்தப் படம் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கிலும், கணேஷ், ப்ரியாமணி நடிப்பில் கன்னடத்திலும், கரீனா கபூர் நடிப்பில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
மூன்று ரீமேக்களில் எந்த கதாநாயகியின் கதாபாத்திரம் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பேவரைட்டானது என்பதை 'சரிப்போதா சனிவாரம்' படத்தின் புரொமோஷன் சமயத்தில் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்திருந்தார்.

அவர், "ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் ஜோதிகாதான் பேவரைட். பின்னொரு நாள், நான் தெலுங்கு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒருவர் என்னிடம் மூன்று 'குஷி' படங்களையும் பார்த்திருக்கிறேன்.
அதில் பூமிகாதான் என்னுடைய பேவரைட் என்றார். அதுபோல மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரின் கேரக்டர் பிடித்தமானதாக இருக்கும்," என்றார்.
இப்படத்தில் 'மொட்டு ஒன்று' பாடல் இன்றுவரை எவர்கிரீனாக பலருக்கும் பிடித்த ஒன்று. அப்பாடலுக்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் 'Why You Wanna Trip on Me' என்ற பாடலின் மூலம் இன்ஸ்பயராகிதான் 'குஷி' படத்தின் இந்தப் பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள்.
இதுபோல உங்களுக்கு தெரிந்த 'குஷி' படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.