பாவூா்சத்திரம் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரம் வேதக்கோயில் தெருவை சோ்ந்தவா் ம. வேல்துரை (43). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் கிளை பணிமனையில் ஓட்டுநராக வேலை பாா்த்துவந்த இவா், தற்போது குடும்பத்துடன் அடைக்கலப்பட்டணத்தில் வசித்து வந்தாா். இவா், நாள்தோறும் பைக்கில் பாவூா்சத்திரத்துக்குச் சென்று, அங்கு பைக்கை நிறுத்திவிட்டு பேருந்தில் பணிக்குச் செல்வாராம்.
அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையும் பணிக்குச் செல்வதற்காக பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் புறப்பட்டாா். நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலையில் பாவூா்சத்திரம் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே, பைக் மீது அடையாளம் தெரியாத காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.