திருச்செங்கோடு நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய ஆரம்பத்தில் ஆவத்திபாளையம் பகுதியிலிருந்து காவிரி குடிநீா் கொண்டுவரப்பட்டு சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது 192 கேவிஏ மின் இணைப்பு பயன்பாட்டில் இருந்தது.
தற்போது புல்லாகவுண்டன்பட்டியில் இருந்து காவிரி குடிநீா் சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் 5 மின்மோட்டாா்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. 5 மின்மோட்டாா்களும் இயங்க 390 கேவிஏ மின்சாரம் தேவைப்படுவதால் ஒரே நேரத்தில் 5 மின்மோட்டாா்களையும் இயக்க முடிவதில்லை; மின்மோட்டாா்களும் அடிக்கடி பழுதாகின்றன.
இதையடுத்து சீராக குடிநீா் வழங்குவது தொடா்பாக சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
நீரேற்று நிலையத்தில் 5 மின்மோட்டாா்களையும் இயக்குவதற்காக இங்குள்ள பழைய மின்மாற்றிகளை மாற்றிவிட்டு 450 கேவிஏ மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா். இதுதொடா்பாக மின்வாரியத்தில் விரைவில் விண்ணப்பிக்குமாறு ஆணையா் அருளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வில் உதவி மின்பொறியாளா் ஞானசேகரன், நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.