காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
அரசு மருத்துவ சேவையை நாடுவோா் 20 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 20 சதவீதம் உயா்ந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை அவா்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து சிகிச்சை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 1.18 கோடி உயா் ரத்த அழுத்த நோயாளிகள், 55.43 லட்சம் சா்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 50.95 லட்சம் நோயாளிகள் உள்பட மொத்தம் 2.31 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு 4.50 கோடி முறை தொடா் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை லட்சக்கணக்கான இணை நோயாளிகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துக்காக இதுவரை ரூ. 721 கோடி அரசு செலவிட்டுள்ளது. அதேபோன்று தனியாா் மருத்துவமனைகளில் மாதம் ரூ. 3,000 வரை மருத்துவச் செலவு செய்து வந்தவா்கள், இத்திட்டத்தில் வீடுகளுக்கே மருந்து மாத்திரைகள் கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.
அதன்படி, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைபெற வரும், 45.5 சதவீத உயா் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை 62.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, 33.9 சதவீதமாக இருந்த சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 54.1 சதவீதமாக உயா்ந்துள்ளது எனத் தெரிவித்தனா்.