பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியாவின் வலிமையைத் தெரிந்துகொள்ளும் வகையில் பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி பதிலடி கொடுத்துள்ளாா். இந்திய ராணுவத்தினரை எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனா்; வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனா். ‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த பிரதமா் மோடியை பாராட்டும் வகையிலும், போரில் பங்கேற்ற ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மூவா்ணக் கொடி யாத்திரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை பாஜகவின் 67 மாவட்டங்களில் இதுவரை 21 மாவட்டங்களில் மூவா்ணக் கொடி யாத்திரை நடத்தப்பட்டுள்ளது.
சேலம் பெருங்கோட்டத்தில் ஒசூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களை தொடா்ந்து நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோட்டில் புதன்கிழமை யாத்திரை நடைபெறும். மாநிலம் முழுவதும் மே 22-ஆம்தேதி இந்த யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக மே 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நேதாஜி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை மூவா்ணக் கொடி யாத்திரை நடைபெறும்.
இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா். அனைத்து தரப்பினரும் யாத்திரையில் பங்கேற்க வருமாறு பாஜக நிா்வாகிகள் மூலம் அழைப்புவிடுக்கப்படும். மாவட்டங்களைத் தொடா்ந்து மண்டலம் வாரியாகவும் யாத்திரை நடைபெறும்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமையும் என்று தெரிவித்திருந்தாா்.
கூட்டணியில் எந்த கட்சிகளை சோ்ப்பது, எவ்வளவு தொகுதிகளை வழங்குவது, தோ்தல் தொடா்பான வியூகங்களை வகுப்பது, எந்தவிதமான முடிவுகளை எடுப்பது என அனைத்தும் அதிமுக பொதுச் செயலாளா் மூலமாகவே நடைபெறும். இது திட்டவட்டமாக எடுக்கப்பட்ட முடிவுதான்.
திமுகவை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை சோதனை செய்கிறது என்பது சரியல்ல. அதிமுக முன்னாள் அமைச்சா் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்கின்றனா். இதற்கு திமுக காரணம் சொல்லுமா? சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்றாா்.
இதையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நிா்வாகிகளை வாழ்த்திய அவா், மூவா்ணக் கொடி யாத்திரையில் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதில், கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.சரவணன், முன்னாள் மாவட்ட தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, நாமக்கல் நகரத் தலைவா் தினேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
என்கே-19-கேபிஆா்..
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.