காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்த டெய்லா் கைது
மனைவியுடன் தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை அடிக்கடி தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த டெய்லரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா், நொச்சிப்பாளையம் அபிராமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (39), டெய்லா். இவரது மனைவி விமலா (38). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். சரவணன் மது அருந்துவதுடன் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.
இதனால், தம்பதியே இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, விமலா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், மனைவியை தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு சரவணன் கடந்த 2 மாதங்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சரவணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.