அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவோரை அடையாளம் காண்பதில், அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுடன் இணைந்து இந்தியாவின் தூதரக விவகாரங்கள் மற்றும் தூதரக பாதுகாப்பு சேவை பிரிவு நாள்தோறும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவிய இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. வெளிநாட்டு கடத்தல் குழுக்கள் இடையே உள்ள தொடா்பை துண்டிக்க இந்த நடவடிக்கை தொடரும்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதில் உள்ள அபாயங்களை வெளிநாட்டவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவுவோா் உள்பட அமெரிக்க சட்டங்களை மீறும் நபா்களை, அதற்குப் பதிலளிக்க வைக்க வேண்டும் என்பதே அமெரிக்க குடியேற்ற கொள்கையின் நோக்கம். அமெரிக்கா்களைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவது முக்கியம்.
இந்த விசா கட்டுப்பாடு கொள்கையை உலகம் முழுவதும் அமெரிக்கா நடைமுறைப்படுத்துகிறது. சுற்றுலா அல்லது வணிக நோக்கத்துக்காக 90 நாள்கள் வரை விசா இல்லாமல் அமெரிக்காவுக்குப் பயணிக்கும் நபா்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேட்டபோது, ‘விசா விண்ணப்பம், அத்துடன் தொடா்புள்ள பிற தகவல்கள் அடங்கிய விசா பதிவேடுகள் குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும். எனவே எந்தெந்த நிறுவனங்கள் மற்றும் நபா்கள் மீது இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்க இயலாது’ என்றாா்.