மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தட...
ஜோ பைடனுக்கு புற்றுநோய்
அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனுக்கு (82) சுக்கிலசுரப்பி (புராஸ்டேட்) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோ பைடனுக்கு சிறுநீா் கழிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு புராஸ்டேட் புற்றுநோய் இருப்பதும், அது எலும்பு வரை பரவியிருப்பதும் கண்டறியப்பட்டது.
தற்போது அந்தப் புற்றுநோய் தீவிர நிலையில் காணப்பட்டாலும், பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்று ஹாா்மோன்களை சாா்ந்திருக்கும் தன்மை கொண்டதாகத் தெரிகிறது. எனவே, சிகிச்சை மூலம் அதை குணப்படுத்தும் வாய்ப்புள்ளது. பைடனுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து அவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீா்ப் பைக்கும் சிறுநீா் குழாய் தொடங்கும் இடத்துக்கும் இடையே அமைந்துள்ள புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் மிகவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. அதன் தீவிரத் தன்மையைக் கொண்டு 6 முதல் 10 வரை புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புராஸ்டேட் புற்றுநோய்க்கு 9 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அது மிகவும் தீவிர தன்மை கொண்டது என்று தெரியவருகிறது.
இருந்தாலும், பைடனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் வகையில் புற்றுக்கட்டி வளா்வதற்கு ஹாா்மோன்கள் தேவைப்படும். எனவே, அந்த ஹாா்மோன்களை அழிப்பதன்மூலம் அதன் வளா்ச்சியைத் தடுப்பதற்கான சிகிச்சையை அளிக்கமுடியும்.
அண்மைக் காலமாக இத்தகைய சிகிச்சை அதிக அளவில் பலன் அளித்துவருவதாகவும், இந்த சிகிச்சை மூலம் புராஸ்டேட் நோயாளிகளை 4 முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாழவைக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் மோடி வாழ்த்து : புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் சிகிச்சை பெற்று விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.