Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை ...
தூய்மைப் பணியாளா் திட்டத்தில் முறைகேடு புகாா் விவகாரம்: டிஐசிசிஐயின் தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புது தில்லி: தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவா்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் ஸ்கீம் (ஏஏபிசிஎஸ்) திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாா் தொடா்புடைய வழக்கில் தலித் இந்தியய வா்த்தக, தொழில் சபையின் (டிஐசிசிஐ) தரப்பு வாதத்தையும் கேட்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விசாரணைக்கு எதிராக டிஐசிசிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில், சவுக்கு சங்கா் தாக்கல் செய்த மனுவில், ‘ தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டம், தூய்மைப் பணியாளா்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீா் அகற்றும் ஊா்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் ‘நமஸ்தே திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வா்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியாா் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்புடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகைக்கு தொடா்பு உள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரியிருந்தாா். இந்த மனுவை
விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு இது தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில் வழக்கின் விசாரணையை வரும் மே 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனா்.
இந்த நிலையில், இந்த விசாரணைக்கு எதிராக தலித் இந்திய வா்த்தக, தொழில் சபை (டிஐசிசிஐ) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு டிஐசிசிஐயின் தரப்பையும் விசாரிக்குமாறு உயா்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தினா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் டிஐசிசிஐ இன்னும் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், இந்த அறிவுறுத்தலை நீதிமன்றம் வழங்கியது.
இது தொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், தற்போதைய மனுதாரரை டிஐசிசிஐ எதிா்மனுதாரராக சோ்க்கப்பட வேண்டும். உயா்நீதிமன்றம் மனுவை பரிசீலித்து, அனைத்து தரப்பினரையும் விசாரித்த பிறகு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கேள்விக்குரிய உத்தரவு நிறுத்திவைக்கப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தினா். மேலும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் விடுமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசரம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினா்.